ஜெம்சித் (ஏ) றகுமான்
மருதமுனை
இலங்கையில் சிறுபான்மை முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் அரசியல் கட்சிகளில் ஒன்றான மர்ஹூம் அஷ்ரப் ஸ்தாபித்த மு.கா.கட்சியினுள் அண்மைக்காலமாக உட் கட்சி பூசல்கள் உக்கிரமடைந்து தளம்பல் நிலையில் உள்ளது.இந்த நிலையை சாதகமாக்கி கொள்ள வேண்டும் என இன்னுமொரு சிறுபான்மை முஸ்லிம் கட்சி
ஒவ்வொரு ஊர்களிலும் வட்டாரக்கிளைகள் அமைத்து தங்களது இருப்பை சமூகத்திற்கு காட்ட முனைந்து
கொண்டிருக்கின்றனர்.ஊர் இரண்டுபட்டால் அதனை கொண்டு எதிர்கால அரசியலை முன்னெடுக்க முடியும் என கற்பனை கப்பலில் மிதந்து கொண்டிருக்கின்றனர்.
அரசியல் கட்சிகளானது சமூகத்தின் அபிவிருத்தி நோக்கிய பயணத்தை குறிக்கோளாக கொண்டியங்க வேண்டும்.சமூகத்தின் அபிவிருத்தியை அடைய வேண்டுமாயின் மக்களிற்குள்ளே
ஒற்றுமை உருவாக வேண்டும்.அடம்பன் கொடியும் திரண்டால் தான் மிடுக்காகின்றது.கட்சிகள் அல்லது மக்கள் தனித்து நிற்பதில் எந்த விதமான நன்மையும் அடையப்போவதில்லை.கட்சிகள் பிரிந்து நிற்கின்ற போது மக்கள் எவ்வாறு ஒன்றாகிட முடியும்.வட்டாரக்
கிளைகள் ஊருக்கு ஊர் அமைக்கப்படுவதனால் அடைய போகும் நன்மை என்ன?கட்சிகளின் அங்கத்துவங்களை அதிகரிப்பதனால் சமூகத்திற்கான அபிவிருத்திகள் கைகூடி வந்து விடுமா?
கடந்த பொதுத் தேர்தலில் அம்பாறை மாவட்ட முஸ்லிம் மக்கள் அளித்த 33000 வாக்குகள் எனும் அங்கீகாரத்திற்கு அக் கட்சி செய்த கைங்கரியம் தான் என்ன?33000 வாக்குகள் சிதறிக்கப்பட்டதனால் அம்பாறை மாவட்ட முஸ்லிம் பாராளுமன்ற பிரதிநிதித்துவம்
ஒன்றை இழந்துவிட்டது. அம்பாறை மாவட்ட முஸ்லிம் மக்கள் இழந்து நிற்கும் பாராளுமன்ற பிரதி நிதித்துவத்தை ஈடு செய்யும் முகமாக வட்டாரக்கிளைகளை அமைக்கும் கட்சி என்ன நடவடிக்கை இதுவரையில் மேற் கொண்டுள்ளது?கிழக்கு மாகாணம் தவிர்ந்த இடங்களில் இருந்து வரும் அரசியல்வாதிகள் அம்பாறை
மாவட்ட முஸ்லிம் சமூகத்தை இலகுவாக ஏமாற்றி பந்தாடி விட்டு செல்ல முடியும் என நினைத்திருப்பது அவர்களின் அறியாமையாகும்.அம்பாறை மாவட்டம் என்பது வந்தாரை வாழ வைக்கும் இடமாகும்.முஸ்லிம் அரசியலின் பரிணாமம் ஆரம்பித்தது அந்த மண்ணிலிருந்துதான்.
சிறுபான்மை இனமாக வாழும் எம் சமூகத்திற்கு எதிர்கால சுபீட்ச அரசியலை முன்னெடுக்க தேவைப்படுவது ஒற்றுமை ஒன்றே.அது கட்சிகள் இடையேயும் மக்கள் இடையேயும் ஒருமித்து
முன்னெடுக்கப்பட வேண்டும்.வட்டாரக் கிளைகள் அமைப்பதன் மூலம் மக்களிடையே பிளவு ஏற்படுமே தவிர சமரச புரிந்துணர்வு ஏற்பட போவதில்லை.அம்பாறை மாவட்டத்தில் 33000 வாக்குகளை வட்டாரக் கிளைகள் அமைத்தா கடந்த பொதுத் தேர்தலில் பெற்றுக்
கொண்டது?சமூகத்திற்கு சரியான பாதைகள் காட்டப்படும் போது அதை ஏற்றுக் கொள்வார்கள்.அங்கத்துவப் படிவத்தை நிரப்புவதன் மூலம் எந்த பயனும் கிடைக்க போவதில்லை.
அம்பாறை மாவட்ட அரசியல் வரலாறு மீண்டுமொரு முறை எழுதப்பட வேண்டும்.வெளி மாகாணங்களில் இருந்து வரும் அரசியல்வாதிகள் அம்பாறை மாவட்ட மக்களை ஏமாற்றி விட்டு சென்று விட முடியும் என நினைத்து முன்னெடுக்கும் அரசியல் காய்
நகர்தல்களுக்கு அம்பாறை மாவட்ட மக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும்.எமது சமூகத்தில் இருக்கும் பலவீனம் ஒன்றே கம்பு எடுத்தவன் எல்லாம் வேட்டைக்காரன் என நம்பி விடுவது.இதை நாம் மாற்றிக் கொள்ளமுயற்சி செய்ய வேண்டும்.தனிமனித சிந்தனை சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்வோம்.
எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது Face Book-PAGEயை லைக் Like செய்யவும்
Like



No comments:
Post a Comment