ஜெம்சித் (ஏ) றகுமான்
மருதமுனை
இலங்கையின் கல்வித்திட்டத்திற்கு அமைய பாடசாலை மாணவர்கள் கா.பொ.த உயர்தரகல்வியை தொடர்வதற்காக அவர்களை தெரிவு செய்ய நடத்தப்படும் பரீட்சையே கா.பொ.த சாதாரண தர பரீட்சையாகும்.அண்மையில் வெளியிடப்பட்டிருந்த சாதாரணதர பரீட்சை பெறுபேற்று வெளியீட்டுக்கு அமைவாக சில மாணவர்கள் அனைத்து பாடங்களிலும் திறமை
சித்திகளையும்(A)சில மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் பலவீனமான(W)சித்திகளையும் பெற்றிருந்தார்கள்.உலக நியதி அடிப்படையில் சிறந்த பெறுபேற்றை பெற்றவர்கள் குதூகலமாக இருப்பதும்,உயர்தர படிப்பை தொடர முடியாதவர்கள் கவலையாக இருப்பதும் சாதாரணமானதாகும்.
அண்மையில் ஊடகச் செய்தி ஒன்றினை வாசித்தேன்.கா.பொ.த சாதாரணதர பெறுபேறுகளை குறைவாக பெற்ற மாணவர்கள் இருவர் தற்கொலை செய்து உலகை விட்டு
பிரிந்திருக்கிறனர்.தற்கொலைக்கான காரணம் பரீட்சை தோல்வி என அச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.உண்மையில் தோல்வியை சகித்துக் கொள்வதற்கு ஏற்ப சிலரின் மனோபாவங்கள் இருப்பதில்லை என்பது தத்துவவியலாளர்களின் ஆய்வின் முடிவாக இருக்கிறது.மனிதன் தான் வாழும் வாழ்க்கையில் எடுக்கும் சில
அவசரமான முடிவுகளால் ஏற்படும் பின் விளைவுகளை எப்போதும் சிந்திப்பதே இல்லை.ஒரு கணம் கோபத்தை அல்லது மனச் சோர்வை தள்ளி வைத்து சிந்திப்பானேயால் சிறந்த தீர்மானங்களை எடுக்க முடியும்.
சாதாரணதர பரீட்சை முடிவுகள் வெளியான பின்னர் எனது நண்பனின் சகோதரனின் பெறுபேற்றை அறிந்து கொள்ள அவனது வீட்டிற்கு சென்றேன்.அவனிடம் பெறுபேற்றை பற்றி விசாரித்த போது அனைத்து பாடங்களிலும் பலவீனமான முடிகள்(W)என பதிலளித்தான்.அந்த நேரத்தில் அவனுடைய தகப்பன்
அவ்விடத்திற்கு வருகை தந்தார்.பரீட்சை பெறுபேறுகளை பற்றியும் தனது மகனின் நிலை பற்றியும் அவர் கூறிய கருத்துகள் என்னை சில நிமிடங்கள் அவ்விடத்தை விட்டு நகர முடியால் நிலைத்திருக்க செய்து விட்டது.அந்த தகப்பன் கூறிய அறிவுரைகள் தோல்விகளால் துவண்டு இருக்கும் மாணவர்களின் மனதை ஆற்றுப்படுத்தும் என்ற வகையில் பதிவிடுகிறேன்.
சாதாரண தர பரீட்சை எழுதுவதற்கு நீ சென்றே போதே உனக்கு தன்னம்பிக்கை உள்ளது என்பதை உணர்ந்து கொண்டேன்.பரீட்சை பெறுபேறுகள் பலவீனமடைந்ததற்கு நீ படித்த வினாக்கள் எதிர்பார்த்ததை போல் இல்லாமலும் இருந்திருக்கலாம்.
நீ ஒரு பாடத்திலாவது சித்தியடையவில்லை என்பதை நினைத்து நாங்கள் யாரும் வருத்தப்பட போவதும் இல்லை உன்னை தண்டிக்க போவதுமில்லை.எந்த விடயமானாலும் அதற்கு கொள்ளளவு இருக்கிறது.உன்னால் முடிந்ததை செய்திருக்கிறாய்.
அதற்காக வருத்தப்பட வேண்டும்.இந் நிலையில் இருந்து மனஉறுதி மிக்கவனாக உன்னை மீட்டு எடுக்க வேண்டியது தகப்பனாகிய எனது கடமை.
வெற்றி என்பது நிரந்தரமல்ல.சிறந்த பெறுபேற்றை பெற்றவர்கள் கொண்டாடுகிறார்கள் என மனமுடைந்து விடாதே.அவர்களின் வெற்றியில் பொறாமையும் கொள்ளாதே.உலகம் எப்போதும் வெற்றியை மட்டுமே பாராட்டுகிறது.தோல்வி அடைந்தவனை தட்டிக் கொடுப்பதில்லை.வெற்றியும்,தோல்வியும்
நிரந்தரமல்ல.தோல்வி அடைந்தவனே அதிகமாக சாதித்தவன் என்பது உலக வரலாற்று பாடம்.தோல்வி அடைவதனால்தான் வெற்றிக்கான வழி பிறக்கும்.நீ வெற்றியின் பாதையை தேடிக் கொள்.இறைவனின் சோதனை விளையாட்டுக்களில் உன் வாழ்க்கையை சூழ்ந்திருப்பது பரீட்சை தோல்வியாகும்.
அறிவு என்பதும் சோதனைதான்.சிலருக்கு சிந்தனை ஆற்றல் அதிகமாவும்,சிலருக்கு குறைவாகவும் இயல்பிலேயே கொடையாக இறைவன் அளிக்கிறான்.சிந்தனை ஆற்றல் குறைவாக உள்ளவன் தேடலின் மூலம் அதிகரித்து கொள்ள வேண்டும்.
வாழ்க்கையின் வெற்றிப்படிகளை நோக்கி பயணிக்க அனுபவம் சிறந்த ஆசானாகிறது.இந்த பரீட்சை பெறுபேறு சிறந்த அனுபவத்தை தந்திருக்கிறது என
நினைத்துக்கொள்.அறிவிற்கும்,அனுபவத்திற்கும் வேறுபாடுகள் அதிகம்.அறிவினால் அடைந்து கொள்ள முடியாதவைகளை அனுபவத்தினால் அடையமுடியும்.ஆற்றைக்கடக்க ஒரு இடத்திலிருந்து படகு மூலம் படித்த மகான் ஒருவர்
செல்கிறார்.அவரை ஏற்றிச் சென்ற படகை ஓட்டி சென்றவன் படிப்பறிவில்லாதவன் படகு அசாதாரண சூழ்நிலையினால் மூழ்க ஆரம்பிக்கிறது.படித்த மகான் அறிவை பயன்படுத்தி தப்பிக்க நினைத்தாலும் அவரால் முடியவில்லை.ஆனால் படிப்பறிவில்லா படகோட்டி அனுபவத்தினால் நீந்தி தப்பித்துக்
கொள்கின்றான்.இதுதான் அறிவுக்கும்,அனுபவத்திற்குமான பாகுபாடாகும்.
கல்வியறிவு இல்லாத பலபேர் இன்று சமூகத்தில் பணம்படைத்தவர்களாக இருக்கின்றனர்.படித்து பட்டம் பெற்றவர்கள் கூட படிப்பறிவில்லாதவர்களின் கீழ் வேலை செய்கின்றனர்.பரீட்சையில் தோல்வி என அவர்கள்
துவண்டிருந்தால் இன்று எஜமானாக வந்திருக்க முடியாது.கொடை வள்ளல்களாக ஏழைகளுக்கு உதவுவர்களில் அதிகமானோர் வாழ்க்கையில் கல்வியில் தோல்வி அடைந்தவர்கள் தான்.அவர்களின் எதிர்நீச்சல் வாழ்க்கையில் நல்ல இடத்தில் வைத்துள்ளது.நம் வாழ்க்கையை நாமே செப்பனிட
வேண்டும்.மனவலிமையை வளர்க்க வேண்டும்.
இறைவன் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு திறமையை வைத்தே படைத்துள்ளான்.நீ உன்னுள் இருக்கும் திறமையை சிறந்த களத்தை ஏற்படுத்தி உலகிற்கு வெளிக்காட்டு.திறைமைகளை அர்பணிப்பான உழைப்பின் மூலமே சாதகமாக்கி கொள்ள முடியும்.பரீட்சை தோல்வியை நினைத்து இனியும் கவலையடையாமல் விழித்தெழுந்து உன் பாதையே தேடி பயணம் செய்.
பரீட்சையில் தோல்வி அடைந்த மாணவர்களை பெற்றோர்கள் கடிந்துகொள்வதை விட அவர்களை தட்டி கொடுப்பதன் மூலம்.பரீட்சை தோல்விகளால் ஏற்படும் மாணவர்கள் தற்கொலைகளை தடுக்கலாம்.
"தோல்வி நிலை என நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா ? .
வாழ்வை சுமை என நினைத்து தாயின் கனவை மிதிக்கலாமா"?
எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது Face Book-PAGEயை லைக் Like செய்யவும்
Like



No comments:
Post a Comment