Breaking

LightBlog

Monday, 5 December 2016

தமிழ் தேசியக் கூட்டமைப்பை தடை செய்ய வேண்டும்..! உதய கம்மன்பில.


தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியற் பிரிவாக இன்றும் செயற்பட்டு வருகின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பை அரசாங்கம் தடை செய்ய வேண்டுமென ஒன்றிணைந்த எதிர்கட்சியின் பங்காளிக் கட்சியான பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில வலியுறுத்தியுள்ளார்.

விடுதலைப் புலிகள் அன்று தங்களை காப்பாற்றியதற்கான பரிகாரத்தின் ஒருபகுதியாகவே கூட்டமைப்பினர் மாவீரர்களை நினைவு கூருகின்றனர். தேசத்தின் துரதிஸ்டத்திற்காக எதிர்கட்சித் தலைவர் பதவி தடை செய்யப்பட வேண்டிய கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

 அதாவது, போர்க் காலத்தில் தேர்தலின்போது ஏனைய கட்சிகளின் வேட்பாளர்களை அச்சுறுத்தி, கொலை செய்த விடுதலைப் புலிகள் இயக்கம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வெற்றிக்கு பாதை அமைத்துக் கொடுத்தது. ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஈ.பி.டி.பி போன்ற கட்சிகளின் வேட்பாளர்கள் இவ்வாறு படுகொலை செய்யப்பட்டனர். தேர்தல் கண்காணிப்பாளர்களின் அறிக்கைகளில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.

அக்காலத்தில் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கிளிநொச்சிக்குச் சென்று விடுதலைப் புலிகளின் அரசியற் பிரிவுத் தலைவராக இருந்த தமிழ்ச் செல்வனை சந்தித்து கலந்துரையாடியே அரசியலை செய்தார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.கே. ஈழவேந்தனின் வழக்கின்போதும் கூட்டமைப்பின் உறுப்பினர்களும் 

அல்லது விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களும் ஒன்று என கனேடிய நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. எனவே தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியற் பிரிவாகவே கூட்டமைப்பு செயற்படுகிறது என்பதை ஐரோப்பிய தேர்தல் கண்காணிப்பாளர்களின் அறிக்கையும், கனேடிய நீதிமன்றமும் உறுதிப்படுத்தியுள்ளது.

1945ஆம் ஆண்டில் ஹிட்லர் தோல்வியடைந்த பின்னர் அவரது கட்சியான நாசி கட்சியை ஜேர்மன் தடை செய்தது. 2003ஆம் ஆண்டில் சதாம் உசைனை தோற்கடித்த பின்னர் அவரது பாத் கட்சி தடை செய்யப்பட்டது. எனவே தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தடை செய்யப்பட வேண்டும். அந்தக் கட்சியின் 

செயற்பாடு இருக்கும்வரை வடக்கில் வேறு கட்சிகளுக்கு தலைதூக்குவது சாத்தியமற்றதாகும். விடுதலைப் புலிகள் தங்களை காப்பாற்றியதற்கான பரிகாரத்திற்காகவே கூட்டமைப்பு இன்று மாவீரர்களை நினைகூர்ந்து வருவதோடு வடக்கில் இனவாதத்தையும் விதைத்து வருகிறது” என்றார்
எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது Face Book-PAGEயை லைக் Like செய்யவும்
Like

No comments:

Post a Comment

LightBlog