Breaking

LightBlog

Tuesday, 15 November 2016

இலங்கையில் தொடரும் சித்திரவதை....


இலங்கையின் நல்லாட்சியிலும், இராணுவம் உட்பட அரச படையினர் தொடர்ந்தும் வெள்ளைவான் கடத்தல்கள், சித்திரவதைகள் மற்றும் பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டும், சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம், இவை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் சித்திரவதைகளுக்கு எதிரான குழு இலங்கைக்கு நேரடியாக விஜயம் செய்து சுயாதீன விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளது.

ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் சபையின் சித்திரவதைகளுக்கு எதிரான குழுவின் 59 ஆவது கூட்டத்தொடரில் நாளைய தினம் இலங்கையில் தொடரும் சித்திரவதைகள் குறித்து ஆராயப்படவுள்ள நிலையிலேயே சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.

சித்திரவதைகளையும், ஆட்கடத்தல்களையும் உண்மையில் தடுக்க வேண்டுமாயின் இலங்கை அரச படைக் கட்டமைப்பில் முழுமையான மறுசீரமைப்பை மேற்கொள்வதற்கு அரசாங்கத்திற்கு, அரசியல் விருப்பம் மற்றும் அர்ப்பணிப்பு இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ள சூக்கா, ஆனால் துரதிஸ்டவமாக தற்போதைய அரசாங்கத்திடமும் அதனை காணமுடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் ஆட்சிக்காலத்தில் இராணுவம் உட்பட அரச படையினராலும், புலனாய்வாளர்களாலும் கடத்தப்பட்டு, சித்திரவதை முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டு சித்திரவதைக்கும், பாலியல் வன்கொடுமைகளுக்கும் உட்படுத்தப்பட்ட 36 தமிழர்களிடம் ஐரோப்பிய நாடுகளில் வைத்து சாட்சியங்களை பதிவு செய்து கொண்டுள்ளதாகவும் சூக்கா மேலும் தெரிவிக்கின்றார்.

இலங்கையில் தொடர்ந்தும் சித்திரவதைகள் இடம்பெறுவதை வெளி உலகம் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே தனக்கு நேர்ந்த கொடூரங்களை கூற முன்வந்ததாக இலங்கையின் வட பகுதியில் வைத்து இந்த ஆண்டு கடத்தப்பட்டு, கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியதாகக் கூறப்படும் இளம் தமிழ் யுவதியொருவர் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்திடம் அளித்த வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளதாக அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் சூக்கா தெரிவித்தார்.

இதேவேளை தனக்கு நேர்ந்தது போல் ஒரு கொடூரம் மற்றுமொருவருக்கு நேரக் கூடாது என்று சித்திர வதைக்கு உள்ளான இளைஞர் ஒருவர் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்திடம் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக புதிய அட்சியின் கீழ் கடத்தப்பட்ட 35 பேரில் 9 பேர் வடக்கிலுள்ள இராணுவ முகாம்களிலேயே தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கும் யஸ்மின் சூக்கா, இலங்கை அரசாங்கம் மனித உரிமைகளை மதித்து செயற்படுவதாக சர்வதேச சமூகத்திடம் அளித்த வாக்குறுதிகளை மதித்து செயற்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது Face Book-PAGEயை லைக் Like செய்யவும்
Like

No comments:

Post a Comment

LightBlog