வில்பத்து சரணாலயத்தை அண்மித்த 4 பகுதிகளை, பாதுகாக்கப்பட வேண்டிய வனப்பகுதிகளாகப் பெயரிடும் வர்த்தமானி அறிவித்தல் குறித்து வெளியிடப்பட்டுள்ள போலியான தகவல்கள் தொடர்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அமைச்சர் பைசல் முஸ்தபா பின்வருமாறு குறிப்பிட்டார்.
எமது சரணாலயப் பகுதிகளைப் பாதுகாக்கும் நோக்கில் ஜனாதிபதி இந்த வர்த்தமானியை வெளியிட்டுள்ளார். முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றத்தைத் தடுப்பதற்காகவோ, முஸ்லிம் மக்களின் பூர்வீகக் காணிகளை இல்லாமல் செய்வதற்காகவோ இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவில்லை என்பதை நான் பொறுப்புடன் கூறிக்கொள்கின்றேன். வனப்பாதுகாப்பை ஏற்படுத்துவதன் ஊடாக முஸ்லிம் மக்களுக்கு பிரச்சினை ஏற்படுத்தும் எவ்வித எண்ணமும் இல்லை. எவருக்கேனும் தமது பூர்வீகக் காணி தொடர்பில் ஏதேனும் பிரச்சினை இருந்தால், வர்த்தமானியில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் அதில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.
இதே வேளை விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவும் ஊடகங்களுக்கு பின்வருமாறு கருத்துத் தெரிவித்தார்.
சரணாலயத்திற்கு சொந்தமான பகுதிகளே கோடுகளின் மூலம் காண்பிக்கப்பட்டுள்ளன. மஞ்சள் நிறத்தில் காண்பிக்கப்பட்டுள்ள பகுதிகளிலேயே முஸ்லிம் மக்களின் வீடுகள் உள்ளன. முஸ்லிம் மக்களின் வீடுகள் மற்றும் பள்ளிவாசல் அதனுள் உள்ளடக்கப்பட்டிருக்கும் என கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன. இது தவறானதொன்றாகும். வன பாதுகாப்பிற்கு சொந்தமான காணிகளை சரணாலய பாதுகாப்பு பகுதிகளாகவும் மக்கள் வாழும் பகுதிகளை வனப்பாதுகாப்பில் இருந்து வேறுபடுத்தவுமே இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது. மீண்டும் ஒருமுறை நாட்டிற்குள் இனவாதத்தை ஏற்படுத்தும் வகையிலான நடவடிக்கைகள் இதனூடாக முன்னெடுக்கப்படுகின்றன. இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி மிகவும் அதிருப்தியடைந்துள்ளார்.
எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது Face Book-PAGEயை லைக் Like செய்யவும்
Like



No comments:
Post a Comment